உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது.
அதன்படி தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில், ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்டோபர் மாதம் 3ம் தேதி, இந்தியாவின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்க உள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த கோகாய் 1954ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பிறந்தவர். இந்திய பார் கவுன்சிலில் 1978ம் ஆண்டு சேர்ந்த அவர் கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றினார். 2001ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, கௌஹாத்தி உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 நவம்பர் 17ஆம் தேதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெறுவார்.