தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சென்னையில் 24ஆம் தேதி திங்கள் அன்று நீதிபதி தருண் அகர்வால் குழு ஆய்வு கூட்டம் நடத்த இருக்கின்றது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் பங்கேற்கும்படி அந்த குழு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் குறித்து ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை அமைத்து கடந்த மாதம் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அந்த குழு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து 22ஆம் தேதி முதல் நேரில் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் 24ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கைக்கு தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ஆய்வு ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது எதிர்த்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது. ஆய்வு தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே நிராகரித்துவிட்ட நிலையில் மத்திய அரசு ஏற்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே திட்டமிட்டபடி ஆய்வுக்கான நடவடிக்கைகளில் தருண் அகர்வால் குழு தொடங்கியுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியாகவே இந்த ஆய்வை கருத வேண்டி இருப்பதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.