டீசல் விலை உயர்வின் எதிரொலியாக படகுகளை கடலுக்கு அனுப்ப உரிமையாளர்கள் மறுப்பதால், மீனவ தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பலதரப்பினரை பாதித்துள்ளது. முன்பெல்லாம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் குறைந்தது 10 ரூபாய் வித்தியாசம் இருக்கும். ஆனால் தற்போது பெட்ரோல் விலைக்கு நிகராக டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றம் மீனவ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.
தினம் தினம் உயரும் டீசலால், மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1,800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றன. இதில், 700க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. டீசல் பிடிக்க முடியாததால் இன்றைய தினம் 100க்கும் குறைவான படகுகளே கடலுக்கு சென்றன.
நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வருவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், டீசல் போட்டு சென்றாலும் அதற்கேற்ற மீன்வரத்து கிடைக்குமா? என்பது சந்தேகம்தான் என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மீனவர்களின் நலன் கருதி, டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மீனவர்களின் ஒரு மித்த குரலாகும்.