நாட்டில் மூன்றில் ஒரு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள்
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து, ஏ.டி.ஆர் என்ற அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 4083 சட்ட மன்ற உறுப்பினர்களில் 1355 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 891 உறுப்பினர்கள் மீது தீவிரமான கிரிமினல்
வழக்குகள் உள்ளன.
தமிழகத்தில் 75 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 44 திமுக உறுப்பினர்கள் மற்றும் 28 அதிமுக உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் எம்.எல்.ஏக்கள் மீது இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் 30 பேரில், 11 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக ஜார்காண்ட் மாநிலத்தில் 63 சதவீத சட்டமன்ற
உறுப்பினர்கள் மீது கிர்மினல் வழக்குகள் உள்ளன. இது கேரளாவில்
62 சதவீதமாகவும், பிகாரில் 58 சதவீதமாகவும், மகாராஷ்ட்ராவில்
57 சதவீதமாகவும் உள்ளது.
மக்களவையில் 179 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள்
நிலுவையில் உள்ளன. மாநிலங்களவையில் 51 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. வழக்குகள் முடிந்து, குற்றம் நிரூபிக்கபட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கபட்டால் மட்டுமே இவர்கள் பதவி இழப்பை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.