ரஃபேல் பிரச்னை: சரத் பவாருக்கு சரிவா?

by SAM ASIR, Sep 29, 2018, 08:35 AM IST

பிரதமர் நரேந்திர மோடி குறித்து தேசியவாத கட்சி தலைவரும் இந்திய பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சருமான சரத் பவார் தெரிவித்த கருத்து அவரது கட்சியில் சச்சரவை உருவாக்கியுள்ளது.

மராத்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, பிரதமர் நரேந்திர மோடியுடனான தன் உறவு குறித்து சரத் பவார் கருத்து தெரிவித்தார். அப்போது, "ரஃபேல் விவகாரத்தில் மோடியின் நோக்கம் குறித்து பொதுமக்கள் மனதில் எந்த சந்தேகமும் இல்லை என்றே உணர்கிறேன். போர் விமானங்கள் குறித்த தொழில் நுட்ப விவரங்களை எதிர்க்கட்சிகள் கோருவது அர்த்தமற்றது," என்று கூறியிருந்தார்.

58,000 கோடி ரூபாய் பேரத்தில் 36 போர் விமானங்களை பிரான்ஸின் டஸால்ட் நிறுவனத்தின் மூலம் வாங்கும் விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று காங்கிரஸூம் மற்ற எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சரான சரத் பவார் தெரிவித்த கருத்துக்கு பாரதீய ஜனதாவின் தேசிய தலைவர் அமித் ஷா நன்றி கூறியுள்ளார். "கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டின் நலன் கருதி உண்மையை பேசியதற்காக பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பவாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பவார் போன்ற கூட்டணி தலைவர்களின் கருத்தின்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியை கேட்டுக்கொள்கிறேன்," என்று அமித் ஷா, டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

சரத் பவாரின் கருத்து, அவரது நெடுங்கால நண்பரும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தாரிக் அன்வரை வருத்தமடையச் செய்துள்ளது. பீஹார் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான தாரிக் அன்வர், சரத் பவார் மற்றும் பி.ஏ. சங்மாவுடன் சேர்ந்து 1990ம் ஆண்டு தேசியவாத கட்சியை தொடங்கினார்.

சரத் பவாரின் கருத்தினை 'துரதிர்ஷ்டம்'என்று வர்ணித்துள்ள அன்வர், கட்சி தலைமையின் கருத்திலிருந்து தாம் மாறுபடுவதாக கூறியுள்ளதோடு, கட்சியின் எல்லா பொறுப்புகளிலிருந்தும் பீஹாரின் கத்திஹார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தாம் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

தேசியவாத கட்சியின் செய்தி தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான மஜீத் மேமனும் கட்சி தலைவர் நவாப் மாலிக்கும் அன்வரின் பதவி விலகலை உறுதி செய்துள்ளனர்.

சரத் பவாரின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே, "அன்வர் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. சரத் பவார் உள்பட யாருடனும் அவர் பேசவில்லை. அவரது செயல் வருத்தமளிக்கிறது," என்று கூறியுள்ளார்.

மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சரான தாரிக் அன்வர், "அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. என்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பிறகு அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வேன்," என்று கூறியுள்ளார்.

"அன்வர் ஒரு நல்ல தலைவர். அவரது அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்," என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பிரேம் சந்த் மிஸ்ரா கூறியுள்ளார்.

You'r reading ரஃபேல் பிரச்னை: சரத் பவாருக்கு சரிவா? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை