த்ரில் வெற்றி- 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா!

7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா!

by Mari S, Sep 29, 2018, 08:42 AM IST

14வது ஆசிய கோப்பையில், இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இறுதிப்போட்டியில், கடைசி பந்தில் சிங்கிள் அடித்து இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது இந்திய அணி.

துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இந்திய நேரப்படி நேற்று மாலை 5 மணிக்கு இறுதிப் போட்டி துவங்கியது. போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங் பிட்ச் என்பதால், பேட்டிங்கை தேர்வு செய்திருக்க வேண்டும் என அப்போதே விளையாட்டு விமர்சகர்கள் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிடத் தொடங்கினர்.

லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் குறைவான ரன்களில் ஆட்டமிழந்த பங்களாதேஷ் அணியை, எளிதில் சுருட்டிவிடலாம், பின்னர் ஈசியாக சேஸ் செய்யலாம் என்ற ரோகித்தின் கணக்கு தப்பு என்று விரைவிலேயே இந்திய அணி உணர ஆரம்பித்தது.

பங்களாதேஷின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லித்தன் தாஸ் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் மெஹிதி ஹாசன், சிறப்பான துவக்கத்தை தந்தனர். மெஹிதி ஹாசன் நிதானமாக ஆடினார். மறுமுனையில் லித்தன் தாஸ், விஸ்வரூபம் எடுத்து, இந்திய பவுலர்களை பஞ்சராக்கினார். சிறப்பாக விளையாடிய லித்தன் தாஸ், 117 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 12 பவுண்டரிகள் விளாசி 121 ரன்கள் குவித்தார்.

இவரை விக்கெட் எடுக்க இந்திய அணி செய்த அனைத்து முயற்சிகளும் வீணாகின. மறுமுனையில் ஆடிய மெஹிதி ஹாசன், 59 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தபோது, கேதார் ஜாதவ் பந்துவீச்சில், அம்பத்தி ராயுடுவிடம் அழகான கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். இதனால், பலமான பார்ட்டனர்ஷிப் பிரேக்கானது.

பின்னர் களம் இறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். சதம் விளாசிய லித்தன் தாஸ், குல்தீப் வீசிய பந்தை அடிக்க முடியாமல் திணற, அவர் கால் வெளியில் இருந்த அந்த ஒற்றை செகண்டை பயன்படுத்தி விக்கெட் கீப்பர் தோனி, அதிவிரைவாக ஸ்டம்பிங் செய்தார். இந்த விக்கெட்டை மூன்றாவது நடுவரே பல நிமிடங்கள் உன்னிப்பாக பல கோணங்களில் பார்த்து, பின்னர் விக்கெட் கொடுத்தார்.

இதனால், 300 ரன்களுக்கும் மேல் ஸ்கோர் போகும் என எதிர்பார்த்த நிலையில், 48.3 ஓவர்களுக்கு பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். கேதார் ஜாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார். பும்ரா மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். புவனேஷ்குமார் விக்கெட்டுகளை எடுக்க இம்முறையும் தவறினார்.

223 ரன்கள் என்ற எளிதான இலக்கை சேஸ் செய்த இந்திய அணி, ஆரம்பம் முதலே சொதப்பலான ஆட்டத்தை கொடுத்து, அந்த இலக்கை கடின இலக்காக மாற்றியது.

துவக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் அரை சதம் கூட எடுக்க முடியாமல் அவுட்டானது இந்திய அணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தவான் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அம்பத்தி ராயுடுவும் பொறுப்பாக ஆடாமல் வெறும் 2 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய தோனி மற்றும் தினேஷ் குமார் ஜோடி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியின் ஸ்கோரை மெதுவாக நகர்த்தினர்.

தோனி 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக் 37 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். கேதார் ஜாதவ் (23- நாட் அவுட்), ஜடேஜா (23), புவனேஷ் குமார் (21), குல்தீப் யாதவ் (5- நாட் அவுட்) என சிறப்பாக ஆடிய பின் வரிசை ஆட்டக்காரர்களால், இந்திய அணி கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்கள் எடுத்து கோப்பையை பங்களாதேஷ் அணிக்கு கிடைக்கவிடாமல் பறித்தது.

மிகவும் பரபரப்பாக சென்ற ஆட்டத்தை இரு நாட்டு ரசிகர்களும் பயத்துடனும், பிரார்த்தனைகளுடனும், விக்கெட்டுகள் சரியும் போது ஆடல் பாடல்களுடனும் கண்டு ரசித்தனர்.

ஆட்ட நாயகன் விருதினை 121 ரன்களை குவித்த பங்களாதேஷ் அணியின் லித்தன் தாஸ் தட்டிச் சென்றா. ஆசிய கோப்பையின் தொடர் நாயகன் விருதினை இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் பெற்றார்.

You'r reading த்ரில் வெற்றி- 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா! Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை