ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா - பங்களாதேஷ் இன்று பலப்பரிட்சை!

by Mari S, Sep 28, 2018, 09:40 AM IST

14வது ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் துவங்குகிறது. இப்போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணி மற்றும் போராடும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. வெல்லும் அணி ஆசிய கோப்பையை வென்று சாம்பியனாகும்.

ரோகித் - தவான் இஸ் பேக்:

இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி தகுதி பெற்றதால், ஆப்கானிஸ்தான் அணியுடனான கடைசி சூப்பர் 4 சுற்று போட்டியில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அதிரடி நாயகன் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனி கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆப்கானிஸ்தானின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி அந்த போட்டியை டிரா மட்டுமே செய்தது.

இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். ஆப்கானிஸ்தான் போட்டியில், சிறப்பாக ஆடினாலும், இன்றைய போட்டியில், கே.எல். ராகுலுக்கு இடம் இல்லை.

ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம் மற்றும் அதிக ரன்கள் தான் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்தியாவிற்கு வெற்றி வாகையை சூடும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

பாய்வார்களா பவுலர்கள்?

அதிரடி ஆட்டம் மட்டுமின்றி, இந்திய அணி இன்றைய போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும். கடந்த போட்டியில், விக்கெட்டுகளை குவிக்க தவறிய புவனேஷ் குமார் இப்போட்டியில், தனது முழு திறமையை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அதேபோல், பும்ரா, கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா ஆகியோர் குறைவான ரன்களை கொடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினால், கோப்பை நமது வசமாகும்.

பழிவாங்குமா பங்களாதேஷ்?

பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அதே துணிவுடன் இந்திய அணியை பங்களாதேஷ் எதிர்கொள்ளவுள்ளது. முந்தைய ஆட்டங்களில் இந்தியாவுடன் அடைந்த படு தோல்விக்கு பழி தீர்க்க பங்களாதேஷ் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆசிய கோப்பையை தங்கள் வசமாக்க அந்த அணியின் வீரர்கள் கடும் உழைப்பை கொட்டுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

துவக்க ஆட்டக்காரர்களான லித்தன் தாஸ் மற்றும் மோர்டஸா நல்ல துவக்கத்தை தந்து அணியை காப்பாற்ற வேண்டும். மேலும், முஷ்பிகுர் ரஹீம் மற்றும் முகமது மிதுன் தங்களின் சிறந்த ஆட்டத்தை இப்போட்டியிலும் தொடர்ந்தால், அது இந்தியாவிற்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும்.

இதுவரை நடந்த லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி பங்களாதேஷை எந்த போட்டியிலும் போராட விடாமல், மரண அடி கொடுத்து மண்ணைக் கவ்வ வைத்ததால், ஆசிய கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவு மற்றும் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். கேப்டன் கோலி இல்லாமலும், இந்திய அணி கோப்பையை வெல்லும் என்பதை இன்றைய போட்டியிலும் இந்தியா நிரூபிக்கும் வாய்ப்பு அதிகம்.

You'r reading ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா - பங்களாதேஷ் இன்று பலப்பரிட்சை! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை