ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த ஆண்டு கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து அளப்பரிய சேதத்தை ஏற்படுத்தியது.
ஆயினும், நாடு முழுவதும் வழக்கமான அளவைவிட குறைவான அளவே (91 சதவீதம்) மழை பெய்திருப்பதாகவும், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மழை அளவு மிகவும் பற்றாக்குறைவு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் பல ஆண்டுகள் நிரம்பாமல் இருந்த சிறுவாணி அணை நிரம்பியது.
எனினும், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவு மழையே பெய்துள்ளது. இதனால், அப்பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படவாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.