ஆப்பிள் நிறுவன ஊழியரைக் காவலர் பிரசாந்த் சவுத்திரி முன்புறமிருந்தே வேண்டுமென்றே சுட்டுக்கொன்றதாக அந்த நிகழ்வைக் கண்ணால் கண்ட பெண் தெரிவித்துள்ளார்.
விவேக் திவாரி தன்னைக் காரை ஏற்றிக் கொல்ல முயன்றதால் தற்காப்புக்காகச் சுட்டதாகக் காவலர் பிரசாந்த் சவுத்திரி தெரிவித்தார். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டின்போது விவேக் திவாரியுடன் காரில் இருந்த பெண் காவல்துறையிடம் சாட்சியம் அளித்துள்ளார். அதில் காருக்கு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய காவலர்கள் அடாவடியாக நடந்துகொண்டதால், விவேக் திவாரி காரை எடுத்ததாகவும், அப்போது காருக்கு முன்வந்த பிரசாந்த் சவுத்திரி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண் அளித்த வாக்குமூலத்தை அடுத்து லக்னோ ஐஜி சுஜித்குமார் முன்னிலையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அந்த இடத்திற்கு சென்று நிகழ்வு எப்படி நடந்தது எனக் காட்சிப்படுத்திப் பார்த்தனர். வாக்குமூலம் அளித்த பெண்ணும் விவேக் திவாரியின் மனைவியும் அப்போது உடனிருந்தனர்.