சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு நிலக்கல்லில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று கேரள மாநில பொது பணித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
சபரிமலைக்கு ஆண்டாண்டு காலமாக பெண்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட பொது நலவழக்கு விசாரணைக்கு பிறகு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும், பெண்களிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு நிலக்கல்லில் அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படும் என்று கேரள மாநில பொது பணித்துறை செயலாளர் கமலவரதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கமலவரதன், திருவிதாங்கூர் அறநிலை செயலாளர் மற்றும் கேரள மாநில கூடுதல் டிஜிபி ஆகியோர் திருப்பதிக்கு சென்று அங்கு செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்து அறிந்துக் கொண்டனர்.
மேலும், பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான இணை செயலாளர் சீனிவாசராஜ் உடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர், இதுகுறித்து கமலவரதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கேரள உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு பம்பாவில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள நிலக்கல்லில் 10,000 பக்தர்கள், 1000 காவலர்கள், தீ அணைப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்குவதற்கான விடுதிகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.