டிட்லி புயல் எதிரொலியால், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பலத்த கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை டிட்லி புயலாக மாறும் எனவும் இது, ஆந்திர மாநிலம் மற்றும் ஒடிசா நோக்கி நகரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக, இரண்டு மாநிலங்களிலும் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும், அது இன்று இரவு முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசா மற்றும் ஆந்திர மாநில கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூர் வழியாக கரையை கடக்கும் என்பதால் ஒடிசா மாநிலத்துக்கு ரெட் அலர்ட் விடுத்து தயார் நிலையில் இருக்கும்படியும் தனியார் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.