மாவோயிஸ்டுகளுடன் சண்டைபோட்டு போராடி வீர மரணம் அடைந்த ஒடிசாவை சேர்ந்த சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சம்பதிக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வீரதீர செயல்கள் புரிந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவம், போலீஸ் மற்றும் பாதுகாப்புபடையை சேர்ந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டுதோறும் அசோக விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி இரவில் 500க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒடிசாவின் கன்ஜம் மாவட்டத்துக்குள் புகுந்து போலீஸ் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளை நாசப்படுத்தினர். இந்த கோர நிகழ்வில், 14 போலீசார் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன்பிறகு, மாவோயிஸ்டுகள் அனைவரும் அங்குள்ள காட்டுப் பகுதிக்குள் சென்று பதுங்கினர்.
அவர்களை சுற்றிவளைப்பதற்காக, சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதி, தன்னுடைய படை வீரர்களுடன் அங்கு சென்று மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர். அப்போது, மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் பிரமோத் குமார் சத்பதி வீர மரணம் அடைந்தார்.
இந்நிலையில், பிரமோத் குமார் சத்பதியின் ஒப்பற்ற தியாகத்தையும், வீரத்தையும் கருத்தில் கொண்டு அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.