விர்ஜீனியாவில் பொங்கல் பண்டிகைக்கு அங்கீகாரம்: தமிழர்கள் உற்சாகம்

Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் பொங்கல் பண்டிகைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால், இன்னும் சில தினங்களில் வர இருக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் மகிழ்ச்சியுடன் தயாராகி வருகின்றனர்.

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் கொண்டாட அந்நாட்டு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, விர்ஜீனியா மாநில பொது சபையில் உறுப்பினர் டேவிட் புலோவா தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார். இது கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி, 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி முதல் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த திருநாளன்று அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மத சுதந்திரத்திற்கு அமெரிக்கா அனுமதி அளிப்பதால் மாணவர்கள் பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தபடி பொங்கல் பண்டிகையை கொண்டாடலாம்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வரும் ஜனவரி 14ம் தேதி அன்று விர்ஜீனியாவில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட மிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த தீர்மானம், விர்ஜீனியா மட்டுமின்றி அமெரிக்காவின் பிற மாநிலங்கள் மற்றும் உலகளவிலும் வாழும் தமிழர்களின் கலாசாரத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் அமைந்துள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
/body>