சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணியவாதியும் பிஎஸ்என்எல் டெக்னீஷியனுமான கொச்சியைச் சேர்ந்த ரஹானா ஃபாத்திமாவை பிஎஸ்என்எல் நிர்வாகம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தவிட்டது. இதையடுத்து அந்த உத்தரவை செயல்படுத்த கேரள அரசு கடும் முயற்சி எடுத்தது. இதற்காக அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி என்ற பெண் முதன்முதலில் தனது குழந்தைகளுடன் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்தார். ஆனால் ஏராளமான பக்தர்கள் அவரது காலில் விழுந்து மன்றாடியதால் அவர் திரும்பச் சென்றார். இதே போல் பல பெண்கள் சன்னதிக்குள் நுழைய முயன்று முடியாமல் போனது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகியோர் அய்யப்பன் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் நுழைய முயன்றனர். ஆனால் பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர்கள் இருவரையும் போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
ஒரு இஸ்லாமிய பெண் எப்படி அய்யப்பன் கோவிலுக்குள் நுழையலாம் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. கொச்சியில் உள்ள ரஹானாவின் வீட்டை இந்து அமைப்பினர் தாக்கினர். 31 வயதான ரெஹானா கேரளாவில் பெண்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்தி வருபவர். இஸ்லாமிய மதத்தில் பிறந்தாலும் அதிலிருந்து வெளியே வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே தற்போது ரெஹானா ஃ பாத்திமாவை பிஎஸ்என்எல் நிறுவனம் டிரான்ஸ்ஃபர் செய்துள்ளது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹானா கொச்சி போட் ஜெட் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் கிளையில் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்தார். தற்போது போட் ஜெட்டி கிளையிலிருந்து எர்ணாகுளம் அருகே உள்ள ரவிபுரம் பகுதிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார். சபரிமலைக்குச் சென்றதால்தான் புகார் கொடுக்கப்பட்டு அவர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார் எனக் கேரள ஊடகங்கள் தெரிவித்து வந்தன.
ஆனால், இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ரெஹானா: ``ஐந்து வருடத்துக்கு முன்பே எர்ணாகுளத்தில் உள்ள எனது வீட்டின் அருகே கிளைக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டிருந்தேன். ஐந்து ஆண்டுகளாக டிரான்ஸ்ஃபர் கிடைக்காத எனக்குச் தற்போது சபரிமலைக்குச் சென்ற பின்பு உடனே கிடைத்துள்ளது என நெக்ழிச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
எல்லாம் அய்யப்பனின் அனுக்கிரகம்தான் என்றும், 45 நிமிஷம் டிராஃபிக் நெரிசலுக்கு மத்தியில் 6 கிலோ மீட்டர் தூரம் ஆபிஸுக்குச் சென்றுவந்த நான் இனி வீட்டிலிருந்து 2 நிமிடத்தில் நடந்தே ஆபிஸுக்குச் செல்வேன். எனக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்த அதிகாரிகளுக்குச் சுவாமி நல்லது மட்டுமே கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.