சிபிஐயின் இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவ், கூடுதலாக இயக்குநர் பொறுப்பை கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா மற்றும், துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே பனிப்போர் நிலவுகிறது. அதிகார மோதலால், ஒருவருக்கொருவர் பரஸ்பர குற்றம்சாட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் மொயின் குரேஷி வழக்கை முடித்து தருவதற்கு அலோக் வர்மா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா குற்றம்சாட்டியிருந்தார். அவர்மீது பதிலுக்கு இயக்குநர் அலோக் வர்மா, ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இந்த விவகாரம் சூடுபிடித்ததை தொடர்ந்து, இயக்குநர் அலோக் வர்மா மற்றும், துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கும், பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.
பிரச்சனை என்ன, நடந்த விவரங்கள் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, சிபிஐயின் புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.