ஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, நாணயமான, எந்த விதமான சாதி மத சார்பும் இல்லாத, அறம் சார்ந்த அரசியல் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அரசியல் பிரவேசம் குறித்து உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அரசியல் அறிவிப்பின் போது, ‘வெளிப்படையான ஜாதி, மத பேதமற்ற ஆன்மீக அரசியல்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பெரும்பாலானோர் ‘ஆன்மீக அரசியல்’ குறித்த அறிவிப்பை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தான் கூறிய ஆன்மீக அரசியல் என்பது என்னவென்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார். இது குறித்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “ஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியல். இது எந்த விதமான சாதி மத சார்பும் இல்லாத, அறம் சார்ந்த அரசியல் ஆகும்.
ஆன்மீக அரசியல் என்பது ஆத்மாவுடன் தொடர்புடைய ஒன்றாகும். கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி தொடர்பான விபரங்கள் பற்றி போக போகத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.