மத்திய புலனாய்வு முகமையான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். ரஃபேல் விவகாரத்தை விசாரிக்க முற்பட்டதாலேயே அவர் மத்திய அரசால் விலக்கப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும், கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவும் ஒரே இரவில் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். சிபிஐயின் பல்வேறு அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் அலோக் வர்மா விலக்கப்பட 'ரஃபேல் போபியா'வே காரணம் என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, "தாம் நாட்டுக்கு காவல்காரனாக இருக்கப்போவதாக கூறி பிரதமர் வாக்கு கேட்டார். ஆனால் அந்தக் காவல்காரர் திருடியுள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து ஏறக்குறைய 59,000 கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பேரத்தில் வெளிப்படை தன்மை இல்லை. அனில் அம்பானியின் அனுபவமேயில்லாத ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம், ரஃபேல் போர் விமான தயாரிப்பு நிறுவனமான டஸால்டுடன் இணைந்து செயல்பட அரசு உதவியுள்ளது. இந்த விஷயத்தில் அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் (ஹெச்ஏஎல்) புறக்கணிக்கப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளார்.
"ரஃபேல் விவகாரத்தை நெருங்குபவர் யாராக இருந்தாலும் அவர் நீக்கப்படுவார் என்பதே பிரதமர் தெளிவாக தெரியப்படுத்தும் செய்தி. நாடும் அரசியலமைப்பும் ஆபத்தில் உள்ளன," என்று ராகுல் காந்தி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் இயக்குநர் அஸ்தனாவை காப்பாற்றுவதற்காகவும், தாம் எழுப்பிய ரஃபேல் விவகாரத்தை கையில் எடுத்ததற்காகவுமே கூடுதல் இயக்குநர் மற்றும் இயக்குநர் இருவரும் விலக்கப்பட்டுள்ளதாக பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.
"ரஃபேல் விவகாரத்தை குறித்து விசாரிக்க ஆரம்பித்ததால்தான் அலோக் வர்மா மாற்றப்பட்டாரா?" என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஐ அடுத்து என்ன செய்ய இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.