ஓராண்டு முழுமைக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 6 மாதங்களில் எட்டிவிட்டதாக மத்திய தணிக்கை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2017 - 2018 நிதியாண்டில் மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 3.53 % இருந்தது. இதனை நடப்பு நிதியாண்டில் 3.3% அதாவது 6 லட்சத்து 24 ஆயிரம் கோடியாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசின் செலவுகள் பன்மடங்கு அதிகரித்து நிதிப்பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.
ஓராண்டுக்கான நிதிப்பற்றாக்குறை ரூ. 6 லட்சத்து 24 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களிலேயே ரூ. 5 லட்சத்து 95 ஆயிரம் கோடி அளவிற்கு நிதிப்பற்றாக்குறையின் இலக்கு எட்டப்பட்டுள்ளது.
மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் இதுதொடர்பான அறிக்கை வெளியிட்டு, மத்திய அரசை எச்சரிக்கை செய்துள்ளது. இந்த நிதிப்பற்றாக்குறை அதிகரிப்புக்கு, வருவாய் வசூல் வளர்ச்சியில் ஏற்பட்ட மந்த நிலையே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் இறுதி வரையிலான முதல் அரையாண்டில் வரி வசூல் ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம் கோடியாக உள்ளது.
இது பட்ஜெட் மதிப்பீட்டில் 39.4%, ஆனால், கடந்த நிதியாண்டில் வரி வசூல் வளர்ச்சி விகிதம் பட்ஜெட் மதிப்பீட்டில் 44.2 % இருந்தது என்று சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய அரசின் மொத்த வருவாய் நடப்பாண்டு ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் பட்ஜெட்டில் 7 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
ஒப்பீட்டளவில் செலவுகள் சற்று குறைவுதான் என்றாலும் அரசின் வருவாய் எதிர்பார்த்தபடி இல்லை என்பதே நிதிப்பற்றாக்குறை அதிகரிப் புக்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், இது வரும் அரையாண்டில் மேலும் மோசமான பற்றாக்குறை பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.