தலைநகர் டெல்லியில் சாலையோரம் வீசப்பட்டிருந்த பச்சிளங்குழந்தையை போக்குவரத்து காவலர்கள் மீட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை, டெல்லியின் ஆப்பிரிக்கா அவன்யூ மற்றும் ஆர்.கே. கன்னா டென்னிஸ் ஸ்டேடியம் அருகில் காவலர்கள் அனில், அமர் சிங் மற்றும் பர்வீன் ஆகியோர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த செடிகளுக்குள் குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது. காவலர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். புதர் ஒன்றினுள் பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதையும் அருகில் நாய்கள் சுற்றிக்கொண்டிருப்பதையும் கண்டனர்.
நாய்களை விரட்டு விட்டு, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். குழந்தை மீட்கப்பட்டு சப்தர்ஜங் சாலை மருத்துவமனையில் மாலை 4 மணியளவில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கைக்குழந்தையை பாதுகாப்பின்றி விடுதல் என்ற இந்திய தண்டனை சட்டம் பிரிவு 317ன் கீழ் சப்தர்ஜங் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.