தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தீபாவளி நாடு முழுவதும் வரும் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 23ம் தேதி வந்ததை அடுத்து, தீபாவளி அன்று நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக, பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பிலும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்கவேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க முடியும் என்றும், எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் கூறியது.
அதன்படி, மாநில அரசு ஆலோசனை நடத்தி பட்டாசு வெடிக்கும் நேரத்தை இன்று அறிவித்துள்ளது. அதாவது, தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பதற்கும், எந்த இடங்களில் பட்டாசுகளை வெடிக்கலாம் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.