96 வயதில் 98 மதிப்பெண் பெற்ற மூதாட்டிக்கு கேரளா மாநில கல்வியமைச்சர் லேப்டாப் பரிசாக அளித்தார்.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் மட்டுமே 90% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்நிலையில், அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கேரளாவில் அக்ஷரலக்ஷரம் என்ற கல்வியறிவித்தல் இயக்கம் ஒன்றை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
அப்படி செயல்பட்டு வரும் அக்ஷரலக்ஷம் என்ற அமைப்பில் பயின்று வரும் மூதாட்டி ஒருவருக்கு 96 வயது. இந்த வயதிலும் அவரின் கல்வி கற்கும் ஆர்வம் குறையவில்லை. அக்ஷரலக்ஷம் நடத்திய தேர்வில் பங்கேற்று 98 மதிப்பெண் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அக்ஷரலக்ஷம் என்ற இந்த அமைப்பின், வாசிப்பு, எழுத்து மற்றும் அடிப்படை கணிதம் ஆகியவற்றுக்கு தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. நூறு மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில் சுமார் 43 ஆயிரத்து 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதியவர்களில் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த 96 வயதான கார்த்தியாயினி என்ற மூதாட்டியும் பயின்று வந்தார்.
100 மதிப்பெண்கள் கொண்ட தேர்வில் பங்கேற்ற கார்த்தியாயினி 98 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த மூதாட்டி கார்த்திகாயினி, தனது வாழ்நாள் முழுவதும் கல்வி கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றும் தனக்கு கம்ப்யூட்டர் பயில ஆசையாக உள்ளது என்றும் கூறினார்.
இந்நிலையில் கேரளாவின் கல்வியமைச்சர் சி.ரவீந்திரநாத் தனது உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றார். அப்போது மூதாட்டி கார்த்தியாயினி வீட்டுக்கும் சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சியாக லேப்டாப் ஒன்றை பரிசாக அளித்தார். பரிசினை பெற்றுக்கொண்ட மூதாட்டி கார்த்தியாயினி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும் லேப்டாப்-இ பெற்ற கார்த்தியாயினி அமைச்சர் ரவீந்திரநாத் முன்னிலையில் லேப்டாப்பில் தனது பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்து காண்பித்து அசத்தினார்.