தங்களது துபாய் நெட்வொர்க்கை பொதுவெளியில் சிபிஐ பகிரங்கப்படுத்திவிட்டதாக பிரதமர் மோடியிடம் ‘ரா’ அமைப்பின் தலைவர் அனில் குமார் தஸ்மானா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிபிஐ அமைப்பின் இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா இடையேயான நிலவிய பனிப்போர் அண்மையில் பகிரங்கமாக வெடித்தது. ரூ5 கோடி லஞ்சம் வாங்கியதாக ராகேஷ் அஸ்தானா, சிபிஐ டிஎஸ்பி தேவேந்தர் குமார், ‘ரா’ அதிகாரி சமந்த் குமார் கோயல், தொழிலதிபர்கள் மகேஷ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டோர் மீது அக்டோபர் 15-ந் தேதி சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரோஷி தொடர்பான வழக்கில் ஐதராபாத்தைச் சேர்ந்த சனா பாபுவை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக இவ்வழக்கு தொடரப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
சிபிஐக்குள்ளே அதிகாரிகளிடையே மோதல், சிபிஐக்கும் ராவுக்கும் பிரச்சனை என்பதால் இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி பிரதமர் மோடியை ரா தலைவர் அனில் தஸ்மானா நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
இச்சந்திப்பின் போது, துபாயில் செயல்பட்டு வந்த ‘ரா’ அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் சிபிஐ பொதுவெளியில் பகிரங்கப்படுத்திவிட்டது. எங்களது ‘ரா’ அதிகாரிகள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி உள்ளனர்.
இப்படி சிபிஐ செயல்பட்டால் நாங்கள் எப்படி சுதந்திரமாக இயங்க முடியும்? இதற்கு பேசால் ஒட்டுமொத்தமாக ‘ரா’ அமைப்பையே மூடிவிடலாமே என கூறினாராம்.
அத்துடன் சிபிஐ குற்றம்சாட்டியுள்ள சமந்த்குமார் கோயல் ‘ரா’ அமைப்பின் 2-ம் நிலை அதிகாரி. 'ரா’ அமைப்பின் துபாய் நெட்வொர்க்கின் இயக்குநராகவும் பணியாற்றியவர்.
மகேஷ் பிரசாத், சோமேஷ் பிரசாத் இருவருமே ‘ரா’ அமைப்பின் முன்னாள் அதிகாரியின் மகன்கள். அந்த ரா அதிகாரியும் துபாய் நெட்வொர்க்கின் தலைவராக இருந்தவர்.
மகேஷ் பிரசாத், சோமேஷ் பிரசாத் இருவரும் தொழில் நிறுவனங்களை நடத்துகின்றனர். இருவரும் ரா அமைப்புக்கு உதவி இருக்கின்றனர். ஏராளமான முக்கிய தகவல்களை வழங்கினர்.
இருவருமே சமந்த்குமார் கோயலுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதைத் தொடர்ந்தே அலோக் வர்மாவுக்கு பிரதமர் மோடி சம்மன் அனுப்பி வரவழைத்திருக்கிறார்.
அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்திக்குமாறு அலோக் வர்மாவிடம் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அஜித் தோவலை சந்தித்த அலோக் வர்மாவிடம் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கிறார்.
மேலும் நான் தான் உங்களை சிபிஐக்கு கொண்டு வந்தேன். நீங்கள் இப்படி ரா அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களே? என்றும் அலோக்வர்மாவிடம் அஜித் தோவல் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேபோல் பிரதமர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் ஐபி தலைவரும் அலோக் வர்மாவை ராஜினாமா கடிதத்தை மின் அஞ்சலில் அனுப்பிவிட்டு ஃபேக்ஸிலும் உடனடியாக அனுப்புமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அலோக் வர்மா சிபிஐ அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். அன்று நள்ளிரவு வரை அலோக் வர்மா ராஜினாமா கடிதத்தை அனுப்பவே இல்லையாம்.
இதனால் அஜித் தோவல் செல்போனில் அவரை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் அலோக்வர்மாவோ அஜித் தோவலிடம் பேசவில்லையாம். இதன்பின்னர்தான் அலோக்வர்மாவை பதவியில் இருந்து விடுவிக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்தது என்கின்றன டெல்லி தகவல்கள்.