கேரளா ஆதிகுடிகளின் குலதெய்வமே சபரிமலை ஐயப்பன்!

Who is Lord Ayyappan

by Mathivanan, Nov 13, 2018, 11:05 AM IST

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு புதிய பிரளயத்தை கிளப்பியிருக்கிறது. ஐயப்பன் கோவிலுக்கு உரிமையானவர்கள் நாங்களே; எங்களிடம் இருந்து பந்தள ராஜாக்கள் கைப்பற்றிக் கொண்டனர் என ஆதிவாசி கோத்ரா மகாசபையின் ஜி.கே.ஜானு வலியுறுத்தியிருந்தார். தற்போது கேரளா முதல்வர் பினராயி விஜயனும் ஐயப்பன் கோவிலும் அதன் நடைமுறைகளும் மலையரன் ஆதிவாசி சமூகத்துக்குரியதுதான் என திட்டவட்டமாகவே தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஐயப்பன் கோவில் யாருக்கு உரிமையானது? என்பது கேரளாவில் நடைபெறும் விறுவிறு விவாதம். மலையாள மொழி ஊடகங்களும் இது பற்றி விரிவான கட்டுரைகளை எழுதி வருகின்றன.

மலையாள மனோரமா நாளிதழின் இணையப் பக்கத்தில் Pandalam royals and Ayyappa myths என்ற தலைப்பில் ஒரு விரிவான கட்டுரையும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதே கட்டுரையில் ஆங்கிலேயர் காலத்தில் எழுதப்பட்ட 'Native Life in Travancore' நூல் மலையரன் ஆதிவாசிகள் தரப்புக்கு ஆதரவான நூலாகவும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

மலையாள மனோரமா, 'Native Life in Travancore' மற்றும் இதே நூலை தழுவி எழுதப்பட்ட The Land of Charity: A Descriptive Account of Travancore and Its People மற்றும் பிற தரவுகளில் பந்தள மகாராஜா மற்றும் மலையரன் சமூகம், ஐயப்பன் குறித்து என்னதான் எழுதப்பட்டுள்ளது என பார்ப்போம்..

பந்தள ராஜாக்கள் யார்?

தமிழகத்தின் மதுரையில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழமன்னர்களால் துரத்தியடிக்கப்பட்ட பாண்டிய மன்னர்கள்தான் பந்தள ராஜாக்கள் என்கிறது வரலாறு. பந்தளத்தில் முதலில் குடியேறிய இந்த மன்னர்கள் பின்னர் ஆரியங்காவு, கோன்னி, சபரிமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளையும் ஆக்கிரமித்தனர்.

அதேநேரத்தில் திருவாங்கூர் மன்னர்களுக்கு முதலில் கட்டுப்படாதவர்களாக இருந்தனர். திப்புசுல்தான் படையெடுப்பின் போது திருவிதாங்கூர் மன்னர்களுக்கு ரூ2.2 லட்சம் தொகை தேவைப்பட்டது. இதை பந்தள மன்னர்கள் கட்டினர். பின்னர் 1820-ல் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த சபரிமலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பந்தள மன்னர்கள், திருவிதாங்கூர் அரசுடன் இணைத்தனர்.

இப்படியாக இரு அரசுகளும் இணைந்ததால் தற்போது திருவிதாங்கூர் சமஸ்தானமும் பந்தள ராஜாக்களும் சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகத்தில் தலையிட்டு வருகின்றனர். மகரவிளக்கு பூஜை காலத்தில் பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணப் பெட்டி சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு பின்னர் திரும்ப கொண்டுவரப்படுகிற நடைமுறையும் இருந்து வருகிறது.

வரலாறு சொல்வது என்ன?

சங்க காலத்தில் இருந்தே பாண்டியர்களின் வரலாறு தொடங்குகிறது. கி.பி. 3-ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் நாட்டை களப்பிரர்கள் கைப்பற்றுகின்றனர். பின்னர் 6-ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டுவரை இடைக்காலப் பாண்டியர்கள் ஆட்சி நீடிக்கிறது.

இவர்களைத் தொடர்ந்து கிபி 12-ம் நூற்றாண்டு முதல் 14-ம் ஆண்டு வரை பிற்காலப் பாண்டியர்களும் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின் நெல்லை சீமையை மையமாகக் கொண்டு நெல்லை பாண்டியர்களும் ஆட்சி புரிந்தனர்.

’பாண்டியர் வரலாறு’ நூலை எழுதிய மூதறிஞர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் இடைக்காலப் பாண்டியர்களின் காலம் கி.பி. 10-ம் நூற்றாண்டு (கி.பி.946-966) என குறிப்பிடுகிறார். இடைக்கால பாண்டிய மன்னர்களின் கடைசி மன்னன் வீரபாண்டியன் எனவும் சுட்டிக்காட்டுகிறார்.

அத்துடன் இந்த வீரபாண்டியனுக்குப் பின்னர் கி.பி.13-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சோழர்களுக்கு கப்பம் செலுத்திய சிற்றரசர்களே பாண்டியர்கள் எனவும் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். ஆகையால் 10-ம் நூற்றாண்டளவில் கேரளாவில் தஞ்சமடைந்த பாண்டியர்களின் வாரிசுதான் பந்தள மன்னர்கள் என்பதை ஏற்க கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இனி ஐயப்பனின் வரலாறு குறித்த தகவல்களைப் பார்ப்போம்.

ஐயப்பனின் வரலாறு குறித்து பந்தள மன்னர் குடும்பம் சொல்வது என்ன?

பந்தள நாட்டு அரசன் ராஜசேகரன் வேட்டைக்குச் சென்ற போது பம்பை நதிக்கரையில் ஐயப்பன் எனும் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. அக்குழந்தைக்கு மணிகண்டன் எனப் பெயர் சூட்டி பந்தள அரண்மனையில் வளர்க்கப்பட்டார். மகாராணிக்கு ஏற்பட்ட வயிற்று வலியைப் போக்க புலிப்பாலை கொண்டுவர காட்டுக்கு அனுப்பப்பட்டார் ஐயப்பன். அங்கு மகிஷி அரக்கியைக் கொன்று புலிக் குட்டிகளுடன் பந்தளம் திரும்பினார் ஐயப்பன் என்கிறது புராணம்.

இதனைத்தான் பந்தள அரச குடும்பமும் கூறுகிறது. ஆனால் ஐயப்பனுக்கு உரிமை கோருகிற மலையரன் ஆதிவாசிகள் சொல்வது என்ன?

ஐயப்பன் மூதாதையர்- மலையரன் சமூகம்

கோட்டயம் பாதிரியார் டபிள்யூ.ஜே. ரிச்சர்ட்ஸையும் மேற்கோள் காட்டி 1883-ல் வெளியான Native Life in Travancore நூலில் கூறப்பட்டுள்ளதன் சுருக்கம்:

சபரிமலையில் இருக்கும் வேட்டை கடவுளான ஐயப்பனுக்கு வழிபாடு செய்யக் கூடிய பூசாரியாக இருந்தவர் தலனானி. இவர் மலைஅரயன் கிராமங்களில் ஒன்றான எருமைபாறையைச் சேர்ந்தவர்.

சபரிமலையில் ஐயப்பனை வழிபட செல்கிற போது காட்டில் நடமாடும் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு அஞ்சி 40 அல்லது 50 பேராக இணைந்து செல்வர். ஒருகட்டத்தில் பூசாரி தலனானியை பக்கத்தில் வசித்து வந்த சோகன்கள் படுகொலை செய்து வனப்பகுதியில் புதைத்துவிட்டனர்.

இது யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் ஐயப்பனின் வேட்டை நாயான புலிகள், இந்த புதைகுழியை தோண்டி எடுத்துவிட்டன. காட்டு யானைகளும் இணைந்து தலனானி உடலை தோண்டி எடுத்தன. தலனானியை கொலை செய்த பாவத்துக்கு சொங்கன்களுக்கு சின்னம்மை நோய் தாக்கியது. இதையடுத்து தலனானியின் வாரிசுகள் பூசாரிகளாகினர்.

கடைசி தலனானி 1881-ம் ஆண்டு மேல்காவு கோவில் பூசாரியான போகும்போது தம்மிடம் இருந்த ஆபரணங்கள் பலவற்றை பாதிரியார் ஹென்றி பேக்கிடம் கொடுத்திருந்தார். இதையடுத்து தலனானியின் வாரிசுகள் அனைவரும் கிறிஸ்துவர்களாகினர் என நீள்கிறது அந்த நூல்.

இதில் (பந்தள மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இல்லை எனலாம்)

மலையரன் மகாசபாவின் கருத்து

ஐயப்பன் குறித்து மலையரன் மகாசபாவின் பொதுச்செயலர் கே. சஞ்சீவ் கூறியிருப்பதாவது: மலையரன் சமூகத்தைச் செர்ந்த கண்டன் மற்றும் கருத்தம்மா தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. மலையரன் சமூக பூசாரி கூர்மனின் ஆலோசனைப்படி 41- நாள் தவத்துக்குப் பின்னர் இக்குழந்தை பிறந்தது.

கண்டனுக்குப் பிறந்த குழந்தை என்பதால் மணிகண்டன் அல்லது இளைய கண்டன் என பெயரிடப்பட்டது. தற்போது பந்தள மன்னர்கள் கூறுவதைப் போல பிறக்கும் போது கழுத்தில் மணியுடன் எல்லாம் ஐயப்பன் பிறக்கவில்லை.

பதினெட்டாம்படி என்கிற விஷயமே ஐயப்பன் கோவிலைச் சுற்றிய 18 மலைகளைக் குறிக்கக் கூடியதுதான். சோழர்களால் மலையரன் இனத்தவர் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட போது பிறந்தவர்தான் மணிகண்டன். இவ்வாறு சஞ்சீவ் கூறுகிறார்.

சோழர்களால் தோற்கடிக்கப்பட்டு பந்தள அரசர்களாக குடியேறிய மன்னர்கள், உதயணன் மற்றும் மகிஷியை வீழ்த்த பிறந்தவர் மணிகண்டன் எனக் கூறுகின்றனர் என சுட்டிக்காட்டுகிறார் சஞ்சீவ்.

மேலும் தாழமோன் தந்திரி குடும்பத்தினர் 1902-ம் ஆண்டு பூஜைகள் நடத்தத் தொடங்கியது முதல்தான் ஆதிவாசிகளின் உரிமை பறிக்கப்பட்டது என்பதும் சஞ்சீவ் குற்றச்சாட்டு. ஆனால் கிமு 100-ல் இருந்தே தங்களது குடும்பம் பூஜை செய்து வருகிறது என்கிறார் தந்திரி மகேஸ்வருரு.

வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து

வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான கே.என். புருஷோத்தமன் கூறுகையில், கிமு 100-ல் இருந்து பூஜை செய்வதாக தந்திரி கூறுவது ஏற்க முடியாது. இவர்கள் பிற்காலத்தில்தான் பூஜை செய்கின்றனர்.

ஏனெனில் காட்டு விலங்குகள் நடமாடும் அடர் வனப்பகுதி என்பதால் பிராமணர்கள் பூஜை செய்ய செல்ல மறுத்துவிட்டனர். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் தற்போதைய தந்திரிகள் பூஜை செய்ய மலைக்கு சென்றிருக்க வாய்ப்புண்டு என்கிறார்.

மேலும் சபரிமலை ஒருகாலத்தில் சாஸ்தா கோவிலாக இருந்தது; பின்னர் சாஸ்தா வழிபாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்பதும் வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய நூல்கள், கருத்துகளின் அடிப்படையில் ஐயப்பன் கோவில் அப்பகுதி மலைகளைச் சுற்றி வாழ்ந்த மலையரன் இனக்குழுவுக்கு சொந்தமானதாதே என்றே நம்பலாம்.

You'r reading கேரளா ஆதிகுடிகளின் குலதெய்வமே சபரிமலை ஐயப்பன்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை