சென்னையில் 1,000 கிலோ நாய்கறி பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் பிரியாணி பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. நாய்கறியை முன்வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் நாகாலாந்து மாநிலத்தில் மீன், ஆடு, மாட்டு கறிகளை விட நாய்கறி வகை உணவுகள் அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து நாய்களை கடத்தும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன என்பது சுவாரசியமான செய்தி.
நாகாலாந்தின் அண்டை மாநில போலீசாருக்கு அவ்வப்போது பெரும் தலைவலியாக இருப்பது ‘நாய்’ கடத்தல் கும்பல்தான். குறிப்பாக அஸ்ஸாமில் இருந்து தெருவில் திரியும் நாய்களை நாகாலாந்துக்கு கடத்தும் சம்பவங்கள்தான் அதிகரித்திருக்கின்றன.
நாகாலாந்து தலைநகர் கோஹிமா மற்றும் திமாப்பூர் நகரங்களில் நாய்கறி விற்பனைக்கு என தனி சந்தைகள் இயங்கி வருகின்றன. நாம் ஆடுகளை வெட்டும் லாவகம் வேறு.. ஆனால் நாகாலாந்துவாசிகள் நாய்களை பிடிக்கும் போதே கொடூரத்தைக் காட்டி விடுகின்றனர்.
நாய்களை கம்பிகள், கயிறுகளால் கட்டித்தான் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். சாக்குகளில் நாய்களை அடைத்து கொடூரமாக தாக்கி மரணிக்க வைக்கின்றனர்.
பின்னர் அவற்றை தீயில் வாட்டி அப்படியே விற்பனைக்கு தொங்க விடுகின்றனர். அந்த மக்களைப் பொறுத்தவரையில் நாய்கறி என்பதுதான் அதிக விலையானது; சமூக அந்தஸ்துக்கும் உரியது.
டெல்லியில் தெருவில் இருந்த நாய்களை நாகாலாந்து மாணவர்கள் கடத்திக் கொண்டு போய் கறிசமைத்த சம்பவமும் கூட அரங்கேறியது. ஆனால் நாய்கறி உண்பது உடலுக்கு கேடு; ஆகையால் நாய்கறி உண்பதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அம்மாநில அரசும் கடந்த சில ஆண்டுகளாக இது குறித்து பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாய்கறி திருவிழா
இதேபோல் சீனாவில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நாய்கறி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த நாய்கறி திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிராணிகள் நல சங்கங்கள் போர்க்கொடி தூக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.