சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட இரண்டடு நாட்கள் ஒதுக்கலாம் என்று கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் யோசனை தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. எதிர்ப்புகளையும் மீறி பெண்கள் சிலர் சபரிமலைக்கு ஏற முயற்சித்தாலும் போராட்டங்கள் நடத்தி தடுத்து நிறுத்திவிடுகின்றனர். இதனால், சபரிமலையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, 4 இளம்பெண்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், நாங்கள் தீவிர ஐயப்ப பக்தர்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நாங்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறோம். ஆனால், அரசியல் கட்சியினரின் எதிர்ப்பால், நாங்கள் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. இதனால், அனைத்து வயது பெண்களும் வழிபட வசதியாக பிரத்யேகமாக 2 அல்லது 3 நாட்கள் ஒதுக்கலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, நேற்று தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேரள அரசு தரப்பில், அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.