இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது டி20 நேற்று மழையால் ரத்தானது. இதனால் இந்திய அணி மற்றும் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பிரிஸ்பேனில் நடந்த முதல் டி20 போட்டியில், மழை குறுக்கிட்டதால் டக்வொர்ட் லீவிஸ் முறை கொண்டு வரப்பட்டு அபாரமாக ஆடியும் கடைசியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், மெல்போர்னில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 19 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது.
மழை சற்று நேரத்தில் விட்டு விடும் மீண்டும் டக்வொர்த் லீவிஸ் முறை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கனமழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. சிட்னியில் நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும். சிட்னியிலும் மழை பெய்து ஆட்டம் டிரா ஆனால் கூட ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விடும்.