சரணாகதி அடைந்தும் கூட்டணிக்காக மோடியிடம் இருந்து சிக்னல் வரலையே... கலக்கத்தில் எடப்பாடி

CM Edappadi Palanisamy Worries over PM Meet

Nov 26, 2018, 14:53 PM IST

பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து சரியான சிக்னல் வராத வருத்தத்தில் இருக்கிறாராம் எடப்பாடி. 'அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் கேட்கிறோம். கூட்டணி விஷயத்தில் இன்னும் நம்மை நம்பாமல் இருக்கிறார்கள்' எனக் கலங்குகின்றனர் அதிமுக அமைச்சர்கள் சிலர்.

கஜா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுத் தருவதற்காகக் கடந்த 22-ந் தேதி பிரதமரை சந்தித்தார் எடப்பாடி. மக்களை நேரடியாகச் சந்திக்காமல் பிரதமரை சந்திப்பதன் பின்னணியில் அரசியல் உள்ளது என அறிக்கை கொடுத்திருந்தார் தினகரன்.

இந்தக் கருத்துக்கு அமைச்சர்கள் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. டெல்லியில் கஜா புயல் பாதிப்புகளை எடுத்துரைத்த எடப்பாடி பழனிசாமி, 20 நிமிடத்தில் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.

இதன்பிறகு பிற்பகல் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதாக இருந்தது. வழக்கம்போல, உற்சாகம் இல்லாமல்தான் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.

பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை விவரித்துவிட்டு, தமிழ்நாடு இல்லம் சென்றுவிட்டார்.

இதைப் பற்றிப் பேசும் அதிமுக வட்டாரமோ, ' பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபியோடு அணி சேருவதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி. தொடர்ச்சியான ரெய்டுகள், வழக்குகள் என அரசைத் துரத்தும் காரணிகள் இருந்தாலும், மோடி என்ற பிக்பாஸை மட்டுமே நம்பியிருக்கிறார் எடப்பாடி.

அதனால்தான், ஆட்சிக்கு எதிராக 110-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு நன்றிக்கடனாக பாராளுமன்றத் தேர்தலில் விசுவாசத்தைக் காட்ட விரும்புகிறார் எடப்பாடி.

இந்தமுறை நடந்த டெல்லி சந்திப்பில், பிரதமரிடம் எந்த உற்சாகமும் தென்படவில்லை. 'உங்களை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை' என சுட்டிக் காட்டுவது போலவே இருந்துள்ளது.

இந்த சந்திப்பின்போது சில விஷயங்களை எடுத்துக் கூற நினைத்தார் ஜெயக்குமார். அதற்கும் மோடி உடன்படவில்லை. இதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. ' எடப்பாடி ஆட்சியை நாம்தான் காப்பாற்றுகிறோம் என்ற கோபம் மக்கள் மத்தியில் உள்ளது. இது நமக்கு எதிராகத் தேர்தலில் மாறும். இது ஊழல் ஆட்சி என்ற பிம்பமும் ஏற்பட்டுள்ளது. இனியும் இவர்களைக் காப்பாற்ற வேண்டாம்' எனப் பேசியிருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். அதன் விளைவாகத்தான் மோடி, அமைதி காக்கிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது" என்கின்றன.

'சத்துணவு திட்டத்தில் நடந்த ரூ.2,400 கோடி ஊழலும் அதையொட்டி வெளிவரும் ரகசியங்களும் சொத்து வழக்குகளும் ஆட்சிக்கு எதிரான அஸ்திரங்களாக மாறி நிற்கின்றன. இந்த வழக்குகளை விடவும் மோடியின் வார்த்தைகளைத்தான் நம்பியிருக்கிறது அதிமுக' என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

-அருள் திலீபன்

You'r reading சரணாகதி அடைந்தும் கூட்டணிக்காக மோடியிடம் இருந்து சிக்னல் வரலையே... கலக்கத்தில் எடப்பாடி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை