போதும் புயலே..!
.......................................
கஜா, தானே, ஒக்கி..
பெயர்கள் பல சூட்ட
சுழன்றடித்தாய்
நிஜம்தான் பொய்யில்லை..
படகுகள், பயிர்கள்
மூழ்கடிக்கப்
பெய்தாயே பெருமழை
மீள வழியில்லை.!
நிலந்தனில் வந்தாடினாய்
பசுமை
வளந்தனைப் பந்தாடினாய்...
குழந்தை
பசித்தழுகிறதே...அதன்
குடல் நனைக்கப்
பால் இல்லை..
வளர்ந்த பிள்ளைக்கும்
உடல் மறைக்க
துணி இல்லை!
புயலென வந்து
மின் கம்பம் சாய்த்தாய்
வெளிச்சம் இழந்தோம்..
வயல் எல்லாம்
வாழை, நெல் சாய்த்தாய்
விளைச்சல் இழந்தோம்!
மகள்களின் கல்யாணத்துக்காய்
வைத்த விவசாயம்
கானல் நீரானதே..
புயலே நீ
பெருமழை பொழிந்தாய்
இப்போ
உணவும்கூட
கனவு ஆனதே!
பாடுகள் மாறாத
மீனவர், விவசாயி
வாழ்வில்
கேடுகளாய் நின்றாய்..
ஆடுகள், மாடுகள்
ஆகியவற்றோடு
ஐம்பதுக்கும் மேலாய்
மனித உயிர்களையும்
ஆசை தீரக் கொன்றாய்!
பள்ளிக் கூடங்களையும்
மரக்கிளை நிறைந்த
சுள்ளிக்காடாக்கி
நடைபோட்டாய்..
வயிற்றுப் பசியுடன்
பள்ளி வரும்
பிள்ளைகளின்
அறிவுப் பசிக்கும்
தடை போட்டாய்!
பச்சைமடி பூத்த
பூமித்தாயின் பிள்ளைகள்
பிச்சைக் கோலத்தில்..
உயிரைத் தவிர
மிச்சமில்லை எதுவும்
அழுகை ஓலம்கேட்குதே
பல நூறு கிலோமீட்டர்
தூரத்தில்..!
பறவைகள் எல்லாம்
கூடு இழந்தன
மரங்கள் சாய்த்தாயே..
மனித
உறவுகள் எல்லாம்
வீடு இழந்திட
நீ எமக்கு
புயலாய் வாய்த்தாயே..!
மணிக்கு நூறு
கிலோ மீட்டர் வேகம்
பெருங் காற்றாய்
பாய்வது உனக்கு
ஒரு கலையா..
தனக்கென உள்ள
ஏழையர் குடிசையையும்
சூறையாடிப்போக
உன் கல் நெஞ்சு
உருகவில்லையா?
காய்ந்தால் வறட்சி
பெய்தால் மழை
சுழன்றடித்தால் புயல்..
இயற்கையே உனக்கு
எத்தனை முகம்தான்..
உன் ஆட்டத்தால்
இழந்தததைச் சீரமைக்க
வேண்டுமே ஒரு யுகம்தான்!
பார் புயலே..
லட்சமாய் தென்னைகள்
வாழைகள், பயிர்கள் சாய்ந்தனவே..
மிச்சமென்று ஒன்றுமில்லை
அத்தனையையும் உன்
கோர நாக்கு மேய்ந்தனவே..!
மகள்களின்
கல்யாணத்துக்காய்
பயிர்கள்
நிலங்களில் உருவானது..
புயலே நீ
அழித்துப் போட்டாய்
உருவான கனா
சருகானது...!
பன்னிரெண்டு
மாவட்டங்கள் உன்னால்
கண்ணிரண்டில்
கண்ணீர்
வடிக்குது பார்..
நாகை, தஞ்சை
மாவட்டங்களிலோ
இதயங்களில் ரத்தமே
வடியுது காரணம்
நீயின்றி வேறு யார்?
மந்திரி வந்தார்
மத்தியக் குழு வந்தார்
வரவில்லை மறு வாழ்வது..
சுற்றியும் இருட்டே
மிரட்டி வருகுது
எப்படி மீள்வது?
போதும் போதும்..
இனியாவது
சாரளாய் வா..
மழையாய் வா..
பெருங்காற்றாய் வர வேண்டாம்..!
புண்ணாய் கிடக்கிற
ஏழை வாழ்வில்
புயல் கொண்டு
கீற வேண்டாம்.!
- அல்லிநகரம் தாமோதரன்