திமுக கூட்டணியில் தங்களது கட்சி இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெறுவதை அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை என நாம் பதிவு செய்திருந்தோம். இதை திமுக பொருளாளர் துரைமுருகனும் தொலைக்காட்சிப் பேட்டியில் உறுதி செய்திருந்தார்.
இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக கூட்டணியில் மதிமுக இல்லை என துரைமுருகன் கூறியுள்ளார். இது தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களை மிகுந்த மனவருத்தத்துக்குள்ளாக்கியுள்ளது.
எனக்கு தன்மானம் முக்கியம். என் தன்மானத்தை விட இயக்கத்தின் நலன் முக்கியம். என் தன்மானத்தைவிட ஈழ விடுதலை முக்கியம். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு செய்தியாளர்களுக்கு வைகோ இனிப்புகளை வழங்கினார்.