கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தான் உண்டியலில் சேமித்து வைத்த 12,400 ரூபாய் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய 1ம் வகுப்பு படிக்கும் மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அடுத்த ஜி.என்.மில் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். வழக்கறிஞரான இவருக்கு தமிழினி (6) என்ற மகள் உள்ளார். இவர், தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளாக பிறந்த நாள் அன்று உறவினர்கள் வழங்கும் பணம், தினசரி பெற்றோர் வழங்கும் பணம் என்று சிறிது சிறிதாக உண்டியலில் சேமித்து வைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் வெங்கட்ராமன் கடந்த சில நாட்களாக கோவை பகுதியில் நிவாரண நிதியை பொது மக்களிடம் இருந்து பெற்று வந்தார்.
அப்போது, வெங்கட்ராமனின் செயலை கவனித்த சிவகுமார், கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்காக உதவும் எண்ணத்தில், அவரும் அவரது மகள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.12,400 பணத்தை புயல் நிவாரண நிதியாக வழங்கினர்.
6 வயது குழந்தையின் உதவும் குணத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். மேலும், தமிழினிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.