திருமணமான ஒரு சில மாதங்களிலேயே தனது மனைவியிடம் இருந்து விவாகரத்துக்கோரி தாக்கல் செய்த மனுவை பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் திடீரென வாபஸ் பெற்றுள்ளார். அதற்கான காரணமும் தெரியவந்துள்ளது.
லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவிற்கும், அம்மாநில மற்றொரு முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயிக்கும் கடந்த மே மாதம் 12-ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களே ஆன நிலையில், தம்பதிக்கிடையே விரிசல் ஏற்பட்டது. விவாகரத்து பெறப் போவதாக பெற்றோரிடம் தேஜ் பிரதாப் கூறினார். இவரது முடிவுக்கு தாய் ராப்ரி தேவி உள்பட உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த தேஜ், உடனே வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர், விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், அரசியல் ரீதியான பிரச்னைகள் கிளம்பியது. தேஜ் பிரதாப்பின் விவாகரத்து மனுவால் லாலு பிரசாத்தின் இரண்டாவது மகனும் பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவின் அரசியல் வாழ்க்கை பாதித்தது.
இந்நிலையில், விவாகரத்து மனு மீதான விசாரணை இன்று பாட்னா நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, விவாகரத்து கோரிய மனுவை திரும்பப்பெற்றார் தேஜ். ஆனால், குடும்பத்தினரின் கடுமையான வற்புறுத்தல் காரணமாகவே விருப்பமின்றி இந்த முடிவை தேஜ் எடுத்ததாக, அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அரசியல் பணிகளில் வேகம் காட்ட வேண்டிய சூழல் காரணமாகவும் தேஜ் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.