கஜா புயலால் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.. பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு, உடை போன்ற அத்தியாவசிய உதவிகள் பொதுமக்களுக்குத் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தன்னார்வத் தொண்டர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் எத்தகைய இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டாலும் சென்னை ட்ரெக்கர்ஸ் கிளப் களமிறங்கி மக்களின் துயரத்தை துடைக்க தன்னால் இயன்ற அளவு பணியில் ஈடுபடும். இந்த அமைப்பில் உள்ள இளைஞர்கள், இளைஞிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
pic: chennai trekkers
அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் வடக்கு தென்பாறை கிராமத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது,உறவினர்கள் யாருமில்லாத நாகம்மாள் என்கிற 82 வயது மூதாட்டியின் நிலையைக் கண்டு அதிர்ந்து போனார்கள். ஆதரவாக யாருமில்லாத நாகம்மாளுக்கு கண் பார்வையும் கிடையாது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வாழ்ந்து வந்தார். கஜா புயல் அவர் வசித்த குடிசையையும் அழித்து போட்டு விட இப்போது வசிக்க இடமில்லாமல் தவித்து வருகிறார். இவரைச் சந்தித்த சென்னை ட்ரெக்கர்ஸ் கிளப் உறுப்பினர்கள் உதவி செய்து ஆறுதல் அளித்தனர். இவரைப் போன்று 80 பேர் இந்த கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் சென்னை ட்ரெக்கர்ஸ் கிளப் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.