கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாயும், டெல்டா மாவட்ட பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 வாகனங்களில் நிவாரணப் பொருட்களும் வழங்கியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் உதவிகளையும், நிவாரணப் பொருட்களையும் அளித்து வருகின்றனர். நடிகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றனர். கேரள அரசும் தற்போது உதவியுள்ளது.
இதுகுறித்து பினராயி விஜயன் தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது: ''கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்குக் கேரள மக்களின் ஆதரவைத் தெரிவிக்கிறோம். புதன் கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்தோம். உணவு, துணி, ஆடைகள் உட்பட்ட 14 லாரிகளில் அவசர பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைத்தோம். ஆறு மருத்துவ குழுவும் கேரளா மின்சார வாரியத்தைச் சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவை என்றால் மேலும் உதவியை அனுப்பவுவோம் ''. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நிதியுதவி அளித்த கேரள முதல்வருக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரான கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் செய்துள்ள ட்விட்டில் "கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்குக் கேரள முதல்வருக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்துக்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு!” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் "கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயனின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.