சென்னை: தமிழகத்தில், ஒரு வாரத்திற்கு மேலேயும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் போராட்டம் நீடிப்பதால், பேருந்து கிடைக்காததால் மாநகராட்சியின் நாய் பிடிக்கும் வண்டியில் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வழங்கக்கோரி தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றுடன் 8வது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், பேருந்துகள் இயங்காததால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் குவிந்து வருகின்றனர்.
ஆனால், கோயம்பேடு செல்வதற்கு கூட பேருந்து கிடைக்காததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரும்பாக்கத்தில் இருந்து மாநகராட்சி நாய் பிடிக்கும் வண்டிகளில் பொது மக்கள் வேறு வழியின்றி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று வருகின்றனர்.