பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வரும் 13,14-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது சசிகலாவிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை முயற்சித்தது.
ஆனால் சசிகலாவோ மவுன விரதம் இருப்பதாக கூறி விசாரணையை எதிர்கொள்ளவில்லை. இந்த நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக சிறை நிர்வாகத்துக்கு வருமான வரித்துறை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள பெங்களூரு சிறை நிர்வாகம், வரும் 13,14 ஆகிய நாட்களில் சசிகலாவிடம் விசாரணை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது.