ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருந்த பாஜக தோல்வியை தழுவி வருகிறது.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கி கடந்த 7ம் தேதியுடன் நடத்தி முடித்தது.
சத்தீஸ்கர் மாநில தேர்தல் கடந்த மாதம் 12 மற்றும் 20ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், 73 சதவீதம் வாக்குகள் பதிவானது. அடுத்ததாக, மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த நவம்பர் 28ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தொடர்ந்து, ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த 7ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்ததுபோல், 5 மாநிலங்களிலும் ஒரேகட்டமாக இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதல்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதைதொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன் மூலம், ஒவ்வொரு மாநிலங்களிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இதன் முதற்கட்ட முடிவில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக 81தொகுதிகளிலும், காங்கிரஸ் 97 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.
இதேபோல், ராஜஸ்தானிலும் பாஜக தோல்வியை சந்தித்து வருகிறது. ஆளுங்கட்சியான ராஜஸ்தானில் பாஜக 66 தொகுதிகளிலும், எதிர்கட்சியான காங்கிரஸ் 98 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
இதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 48 தொகுதிகளில் வென்று முன்னிலையில் உள்ளது. பாஜக 27 தொகுதிகளில் வென்று பின்னடைவை சந்தித்து வருகிறது.
தெலுங்கானாவில் டிஆர்எஸ் 80 தொகுதிகளிலும், காங்கிரஸ் 27 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.