ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியும்: லண்டன் மருத்துவர்கள் தகவல்

London doctors information Robots can be operated

by SAM ASIR, Dec 11, 2018, 09:03 AM IST

"எனக்கு இந்த டாக்டர்தான் ஆப்ரேஷன் செய்தார்," என்று இனி நாம் யாரையும் சுட்டிக்காட்ட முடியாது. "இந்த டாக்டரம்மா கையால தான் நீ பிறந்தே," என்று பிள்ளைகளிடம் கூறவும் இயலாது. ஆம், அறுவை சிகிச்சைகளை இனி இயந்திர மனிதர்களான ரோபோக்களே செய்ய முடியும் என்று பிரிட்டன் மருத்துவ ஆணையம் ஒன்று கூறியுள்ளது.

குறிப்பாக, பிரசவத்திற்கான சிசேரியன் அறுவை சிகிச்சைகளை ரோபோக்கள் செய்யும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். ராயல் காலேஜ் என்ற கல்வி நிறுவனத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் 2017ம் ஆண்டு அறுவை சிகிச்சைகளின் எதிர்காலத்தை குறித்த ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் கெர் இந்த ஆணையத்திற்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். டியான் மோர்ட்னம் என்ற பேராசியர் இந்த ஆணையத்தின் உறுப்பினராக இருக்கிறார்.

பிரசவம் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை இயந்திர மனிதர்களான ரோபோக்கள், மருத்துவ உதவியாளர்களின் கண்காணிப்பில் செய்ய முடியும் என்ற இந்த நிபுணர்கள் கூறியுள்ளனர். குடல் பகுதி, இருதயம் மற்றும் நுரையீரல் இவற்றுக்கான அறுவை சிகிச்சைகளையும் ரோபோக்கள் செய்யக்கூடுமாம்.

முறையான கல்வியறிவு பெறாத மருத்துவ உதவியாளர்களுக்கு பயிற்சியளித்து அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்களை கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், இதுபோன்ற அறுவை சிகிச்சையின் கண்காணிப்பாளர்களாக, பொறுப்பாளர்களாக இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் உடல் உறுப்புகள் அழிக்கப்படுவதற்கு முன்பே நோயை இதுபோன்ற மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறிய முடியும் என்றும், முன்னரே நோயை அறிந்து கொள்வதால், அறுவை சிகிச்சையின் பின் விளைவான ஆபத்து மற்றும் சிகிச்சைக்கான செலவு ஆகியவை குறையும் என்றும் நம்பப்படுகிறது.
2015ம் ஆண்டில் இங்கிலாந்தில் நியூகேஸில் என்ற இடத்தில் 69 வயது மனிதருக்கு ரோபோவை கொண்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் உயிர் பிழைக்கவில்லை. ஆகவே, ரோபோக்களை அறுவை சிகிச்சையில் ஈடுபடுத்துவது சர்ச்சைக்கு இடமளிக்கும் ஒன்றாகவே இருக்கிறது.

பிரிட்டன் மருத்துவ ஆணையத்தின் அறிக்கையின்படி, மரபணு சோதனையினால் புற்றுநோய் போன்றவை உடல் பாகங்களை அழிக்கும் முன்னரே கண்டுபிடிக்க முடியுமாதலால் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை இவ்விதத்தில் வெகு வேகமாக செய்ய முடியும். எலும்பு பாதிப்பான ஆர்த்ரைடீஸை முன்னரே கண்டுபிடிப்பதால் பெரிய அளவிலான இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான அவசியத்தை குறைக்கலாம் என்று தெரிகிறது.

"இது அறுவை சிகிச்சை உலகில் பெரிய திருப்பு முனை. இவை அனைத்துமே தகுதி வாய்ந்த நிபுணர்களின் கண்காணிப்பிலேயே நடைபெறும்," என்று ஆணையத்தின் தலைவரும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான ரிச்சர்ட் கெர் கூறியுள்ளார்.

ரோபோக்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் பிரசவத்திற்கான அறுவை சிகிச்சைகளை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியும்: லண்டன் மருத்துவர்கள் தகவல் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை