மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் கதாநாயகனாக இருந்தவர்தான் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ்.
தமிழக அரசின் எல்காட் உள்ளிட்ட பல துறைகளில் பதவி வகித்தவர் சக்தி காந்த தாஸ். மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறை செயலாக 2016-ம் ஆண்டு சக்தி காந்த தாஸ் பதவி வகித்தார்.
பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து நாட்டையே அதிர வைத்தார். இந்த அறிவிப்புக்கு முன்னர் பிரமர் மோடி அதிகமாக ஆலோசனை நடத்தியது சாட்சாத் சக்தி காந்த தாஸிடம்தான்.
பிரதமர் மோடியின் அறிவிக்குப் பின் வங்கிகளில் பணம் எடுக்க விதித்த கட்டுப்பாடுகள், பின் அவை தளர்த்தப்பட்டது ஆகியவை தொடர்பாக அப்போது மக்களுக்கு விவரித்தவரும் சக்தி காந்த தாஸ்தான்.
ரிசர்வ் வங்கியை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு இணக்கமான அதிகாரியான சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது நிச்சயம் சர்ச்சையை கிளப்பும்.