ஓடும் ரயில்களிலேயே பயணிகள் ஷாப்பிங் செய்யக்கூடிய வசதியை ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
ரயில்வே துறையின் கீழ் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல வகை ரயில்கள் ஓடுகிறது. இந்த வகை ரயில்களில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு வசதி, அவசர உதவிக்கு ஆப் வசதி, டிஜிட்டல் மயம், கேட்டரிங் சர்வீஸ் என பயணிகளுக்கு சவுகரியத்தை ஏற்படுத்தும் சேவைகளை ரயில்வே செய்து வருகிறது.
அந்த வகையில், ஓடும் ரயில்களில் அழகு சாதன பொருட்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை பயணிகள் ஷாப்பிங் செய்யக்கூடிய வசதியை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம், பயணிகள் ஒவ்வொரு பிளாட்பார்மிலும் ரயில் நிற்கும்போது கடைக்கு ஓடிப்போய் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. பயணிகள் பயணிக்கும் ரயில்களின் உள்ளேயே இனி ஷாப்பிங் செய்துக் கொள்ளலாம்.
இத்திட்டம் முதற்கட்டமாக, மும்பை மண்டலத்தில் மேற்கத்திய ரயில்வே, பயணிகளக்கு இந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்த உள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில் பயணிகளுக்கு வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை சாதனங்கள், அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, 15 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஷாப்பிங் வசதி கொண்டுவரப்படும். 5 ஆண்டுகளுக்கு 3.5 கோடி கட்டணத்தில் இந்த ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. ஒப்பந்தம் செய்தவர்கள் ரயில்களில் பொருட்களை விற்பனை செய்யலாம்.
சீருடை அணிந்த 2 பணியாளர்கள் விற்பனையில் ஈடுபட வேண்டும். பயணிகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்கலாம். விற்பனை செய்யப்படும் பொருட்கள், அதன் விலை விவர பட்டியல் பயணிகளுக்கு வழங்கப்படும். அதிலிருந்து, அவர்கள் பொருட்களை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம். இந்த வசதி முதல்கட்டமாக 2 ரயில்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.