கடவுள் அனுமனை அந்த ஜாதி..... இந்த ஜாதி.... என பா.ஜ.க.வினர் இம்சிப்பதை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கையை தீ வைத்து அழித்தது போல் ஒட்டுமொத்த பா..ஜ.க.வை கொளுத்தி விடுவார் என நடிகரும் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவருமான ராஜ் பாப்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கடவுள் அனுமனை தலித் என்று கூறி உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சையைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் அனுமனை ஆதிவாசி என்றார்.
உ.பி.மாநில எம்.எல்.சி.யான புக்கால் நவாத் என்பவரோ சல்மான், ரஹ்மான், ரம்ஜான் என்ற முஸ்லீம்களின் பெயர் உச்சரிப்பு போல் அனுமான் பெயரும் இருப்பதால் அவர் முஸ்லீம் என சிண்டு முடிந்தார். தொடர்ந்து உ.பி.மாநில அமைச்சர் ஒருவர் அனுமனை ஜாட் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூற இல்லையில்லை அனுமன் கோண்டு இனத்தைச் சேர்ந்தவர் என சமாஜ்வாதி தேசிய செயலாளரான ராம் சங்கர் வித்யார்த்தி என்பவர் உரிமை கொண்டாடினார்.
போகிற போக்கில் சாமியார் ஒருவரோ அனுமன் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர் என்று தூபம் போட உ.பி.யில் நாளும் அனுமனின் ஜாதி பற்றிய சர்ச்சை றெக்கை கட்டிப்பறக்கிறது. இந்நிலையில் அனுமனை இம்சித்தது போதும் என்று நடிகரும் உ.பி.மாநில காங்கிரஸ் தலைவருமான ராஜ் பாப்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் அனுமனை தலித் என்றதால் கோபமடைந்த அனுமன் 3 மாநிலங்களில் தனது நீண்ட வாலைக் கொண்டு பா.ஜ.க.வெற்றி பெற முடியாமல் துடைத்தெறிந்து விட்டார். இத்தோடு அனுமனை ஜாதியின் பெயரால் இம்சிப்பதை பா.ஜ.க.வினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் அனுமன் இலங்கையை தீ வைத்த கதை தான் பா.ஜ.க.வுக்கும் நேரிடும் என்று ராஜ் பாப்பர் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருப்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது.