ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட முதல் பெண்மணி என்ற புகழ் படைத்தவர் வீரமங்கை சிவகங்கை சீமையின் ராணி வேலுநாச்சியார். கப்பம் கட்ட மறுத்த காரணத்தால் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் 1772-ம் ஆண்டில் வேலுநாச்சியார் கணவர் சிவகங்கை மன்னர் வடுகநாத தேவர் வஞ்சகமான முறையில் கொல்லப்பட்டார்.
ஆங்கிலேயரை பழி தீர்க்கவும், சிவகங்கை சீமையை மீண்டும் பிடிக்கவும் சபதமேற்றவர் வேலுநாச்சியார். மருது சகோதரர்களின் உதவியுடன் 8 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி பெரும் படையையும் திரட்டினார்.
மைசூர் மகாராஜா ஹைதர் அலியின் படை உதவியுடன் 1780-ம் ஆண்டில் ஆங்கிலேயரை துவம்சம் செய்து விரட்டியடித்து சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி ஆட்சி பீடம் ஏறியவர் வேலுநாச்சியார். சரித்திரத்தில் இன்றும் போற்றிப் புகழப்படும் வீரமங்கை வேலுநாச்சியாரின் 222-வது நினைவு தினம் இன்று.
இதையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வீரப் பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு சீமான் தலைமையில் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் உருவப் படத்திற்கு சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நினைவுச் சுடரேற்றி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் வேலுநாச்சியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தி முழக்கங்களை எழுப்பி உறுதிமொழி ஏற்றனர்.