காவல் கண்காணிப்பாளரிடம், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகம் செய்து, தனக்கு வேண்டிய வேலையை உடனடியாக முடித்துக் கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியின் அருகே உள்ள பகுதி கௌதம புத்தர் நகர். இப்பகுதியில் ஊரக காவல் கண்காணிப்பாளராக பணியில் இருப்பவர் வினீத் ஜெய்ஸ்வால். வினீத் ஜெய்ஸ்வாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு நபர், தாம் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர், தமக்கு வேண்டியவர்களுக்கு ஒரு வேலை நடக்க வேண்டும் என்றும் அதை உடனடியாக நடத்தி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் மேலும் அழுத்தம் கொடுத்ததால், எஸ்.பிக்கு அந்த நபர்மேல் சந்தேகம் ஏற்பட்டது. அந்த தொலைபேசி எண்ணை கண்காணிக்கும்படி எஸ்.பி. உத்தரவிட்டார். கண்காணிக்கப்பட்டதில் அந்த எண் காஸியாபாத் பகுதியை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. காவல் கண்காணிப்பாளரின் உத்தரவை தொடர்ந்து நொய்டா பெருநகரத்தின் பாதல்பூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் அந்த எண்ணுக்குரிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது, திரிபுரா மாநிலத்தில் பணியாற்றும் தமது தூரத்து உறவினரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் பெயரையும், பதவியையும் பயன்படுத்தி இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்து காரியங்களை சாதித்துள்ளதாகவும், உறவினர்களுக்கு நண்பர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே தாம் இப்படி செய்ததாகவும், இதன் மூலம் பணம் எதுவும் சம்பாதிக்கவில்லையென்றும் அந்த நபர் கூறியுள்ளார்.
மோசடியில் ஈடுபட்ட அந்த நபரின் பெயர் மணி தியாகி என்றும், முப்பது வயதுக்குள்ளான வாலிபரான அவர் பி.ஏ. பட்டம் பெற்றிருப்பதாகவும் தனியார் நிறுவனமொன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றுவதாக கூறுவதாகவும், அவர் கூறிய தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லையென்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.