சபரிமலையில் பெண்கள் இருவர் இன்று ஐயப்பனை தரிசனம் செய்த விவகாரம் கேரளாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். சபரிமலையில் பிந்து, கனகதுர்கா என்ற கேரளத்தைச் சேர்ந்த இரு பெண்கள் இன்று அதிகாலை சன்னிதானம் சென்று ஐயப்பனை வழிபட்டனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தாமதமாகவே வெளியானது. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பினர் கேரளாவில் போராட்டங்களில் குதித்தனர். திருவனந்தபுரம், திருச்சூர், பத்தனம்திட்டா, மாவேலிக்கரா காசர்கோடு, செங்கனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் எதிரே திரண்ட போராட்டக்காரர்கள் சரமாரியாக கல்வீச்சில் ஈடுபட்டனர்.
டயர்களை தீ வைத்து கொளுத்தினர். முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கோஷமிட்டபடி தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முற்பட்டனர். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் பா.ஜ.க ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் தலைமைச் செயலக வளாகமே போர்க்களம் போலானது. கேரளாவின் பல பகுதிகளிலும் இதே போன்று வன்முறை நடந்து வருவதால் மாநிலம் முழுவதும் பதற்றமாக உள்ளது. இந்நிலையில் கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் நாளை கறுப்பு நாளாக அனுசரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.