திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் ’தமிழ் முழக்கம் 'சாகுல் அமீது' தமது கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதியில் கணிசமான இஸ்லாமியர்கள் இருப்பதால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக நாம் தமிழர் கட்சியில் விவாதம் நடைபெறுகிறது என நாம் முதலில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஸ்டாலின், தினகரன் போன்றவர்கள் களத்துக்கு வந்தால் நடிகர் மன்சூர் அலிகானை நிறுத்தலாமா என்கிற விவாதம் நடைபெறுவதாக அச்செய்தியில் இன்று பதிவிட்டிருந்தோம்.
இந்நிலையில் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, திருவாரூர் தொகுதி வேட்பாளர் என சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில். சாகுல் அமீது வருகின்ற சனவரி 28, அன்று நடைபெறவிருக்கும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம்காண்கிறது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் களப்பணிகளில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.