அதிமுக எம்.பி.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேட்டியளித்த தம்பித்துரை செய்தியாளர்களிடம் எகிறி கோபப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரம் அதிமுக மேலிடத்தில் பதற்றத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்கு வெளியில் தம்பித்துரை பேட்டியளிக்கும் போது பதற்றமாகவே இருந்தார்.
மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தமிழகத்திற்கு செய்த துரோகம் என்றார். மத்திய அரசு அனுமதியை திரும்பப்பெறும் வரை நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் தொடரும் என்று கூறினார்.
அப்போது செய்தியாளர்கள், ரபேல் முறைகேடு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை திசை திருப்பவே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அதிமுக அமளியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே? என்றனர். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற தம்பித்துரை ஆவேசப்பட்டார். செய்தியாளர்களை முறைத்தபடி, எங்களுக்கு முக்கியப் பிரச்னை காவிரி தான். ரபேல் விவகாரம் இரண்டாம் பட்சம் தான் என்று ஆவேசப்பட்டார்.