மேகதாது அணை விவகாரத்தில் மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் மேலும் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி வழங்கியதைக் கண்டித்து தமிழக எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர். நேற்று ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக மக்களவையில் நடந்த காரசார விவாதத்தின் போதும் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அப்போது சபையில் பேசிக் கொண்டிருந்த தலைவர் ராகுல் காந்தி ஆவேசமடைந்து, பா.ஜ.க.வை காப்பாற்றும் வகையில் அதிமுக எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை முடக்குவதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் நேற்று சபையில் இருந்த அ தி மு க எம்பிக்கள் 26 பேரை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று மக்களவை கூடியவுடன் அதிமுக எம்.பி.க்கள் மேகதாது பிரச்னையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் மற்றொரு புறம் கூச்சலிட்டதால் மக்களவையை 12 மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். 12 மணிக்கு சபை கூடிய போதும் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அதிருப்தி தெரிவித்தும் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து இடையூறு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் 7 பேரை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.