மராத்தியர் ஒருவர் நாட்டின் பிரதமராகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை மனதில் வைத்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கொளுத்திப் போட்டது பா.ஜ.க.மேலிட வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிரான அலை வீசும் என்ற கருத்து பா.ஜ.க.விலேயே நிலவுகிறது. இதனால் பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற ஆர்.எஸ்.எஸ். தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
இதில் நிதின் கட்கரி பிரதமர் பதவி மேல் கண் வைத்து சமீப காலமாக தனி ரூட்டில் காய் நகர்த்தி வருகிறார் என்றும் பா.ஜ.க வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கு தூபம் போடுவது போல் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மராத்தியர் ஒருவர் பிரதமராகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கொளுத்திப் போட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்த உலக மராத்தி மாநாட்டில்தான் பட்னாவிஸ் இக்கருத்தை வெளியிட்டார். தற்போது மத்திய அமைச்சராக உள்ள நிதின் கட்கரி, காங்.மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷில் குமார் ஷிண்டே உள்ளிட்ட மகாராஷ்டிர மாநில பிரபலங்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
அப்போது தொண்டர் ஒருவர், சுதந்திர இந்தியாவில் மராத்தியர் ஒருவர் கூட இதுவரை பிரதமரானதில்லை. 2050-க்குள்ளாவது மராத்தியர் பிரதமராவது சாத்தியமாகுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதலளித்த பட்னாவிஸ், இந்திய சரித்திரத்தில் நாட்டின் பெரும் பகுதியை ஆண்டவர்கள் மராத்தியர்கள் தான். பல்வேறு காலக்கட்டங்களில் சரித்திர சாதனையும் படைத்துள்ளனர். மராத்தியர் ஒருவர் பிரதமராகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
2050-க்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட மராத்தியர் பிரதமர்களாவார்கள் என்று கொளுத்திப் போட்டார். பட்னாவிசின் பேச்சால் மேடையில் தர்மசங்கடத்தில் நெளிந்த கட்கரி திடீரென மேடையை விட்டு வெளியேறினார். மராத்தியர் பிரதமராக வேண்டும் என்ற கோஷத்தால் பா.ஜ.க.வில் புது சர்ச்சை றெக்கை கட்டிப் பறக்கிறது.