ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என பா.ஜ.க.வை போட்டுத் தாக்குகிறது காங்கிரஸ். வரும் தேர்தலுக்கும் மோடிக்கு எதிராக முக்கிய ஆயுதமாக கையில் எடுத்துள்ளது.
கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்திலும் ரபேல் விவாதம் சூட்டைக் கிளப்புகிறது. கேள்விக் கணைகளால் பா.ஜ.க.வையும், மோடியையும் வறுத்தெடுக்கிறார் ராகுல் என்றே கூறலாம். பதிலளிக்க வேண்டிய பிரதமர் மோடி எங்கே? ராணுவ அமைச்சர் எங்கே? என சரமாரியாக விளாசுகிறார்.
மோடி ஓடி ஒளிகிறார், ராணுவ அமைச்சரோ அதிமுக எம்.பி.க்களின் பின்னால் பதுங்குகிறார் என்றெல்லாம் கிண்டலடித்தார் ராகுல் . ஒரு வழியாக நேற்று இந்த விவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆவேசமாக பேசினார். போபார்ஸ் ஊழலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். ஆனால் நிர்மலா சீதாராமனை ராகுல் விடுவதாக இல்லை. 2 மணி நேர பதிலில் நான் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட பதில் இல்லையே என்று ஆவேச தாக்குதலைத் தொடுத்தார்.
அனில் அம்பானியை பங்குதாரராக சேர்த்தது யார்? ரபேல் விமானத்தின் விலையை கூட்டியது யார்? இதெல்லாம் மோடி மட்டும் செய்தாரா? அல்லது ராணுவ அமைச்சர், ராணுவ, விமான தளபதிகளை ஆலோசித்து எடுத்த முடிவா? என்ற கேள்விகளை அடுக்கிய ராகுல், இதற்கு யெஸ் ஆர் நோ என பதிலளிக்க முடியுமா என விளாசினார். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நிர்மலா சீதாராமன் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் குடிக்கும் காட்சியுடன் கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாக பரவி வருகிறது.