ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பைல்கள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். எனவே மனோகர் பாரிக்கருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதிக்கு கோவா மாநில காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கிய பைல்கள் தமது படுக்கை அறையில் பத்திரமாக தூங்குகிறது என மனோகர் பாரிக்கர் தமது அமைச்சரவை சகாக்களிடம் கூறியதாக ஆடியோ ஆதாரத்தை சமீபத்தில் காங்கிரஸ் வெளியிட்டு பரபரப்பானது. அந்த பைல்களை வைத்துக் அைாண்டு பிரதமர் மோடியை பிளாக்மெயில் செய்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த டேப் உண்மையில்லை என்று பா.ஜ.க. தரப்பு மறுத்து வருகிறது. இந்நிலையில் கோவா மாநில காங்கிரஸ் தரப்பில் இன்று ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. ரபேல் தொடர்பான ரகசிய பைல்களை ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டோர் கைப்பற்ற நினைக்கலாம். அதனால் பாரிக்கரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
எனவே பாரிக்கருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கடிதத்தில் ஜனாதிபதிக்கு கோவா மாநில காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.