தேர்தலையும் அறிவிச்சிட்டு கருத்தும் கேட்பது சரியா? -தேர்தல் ஆணையத்துக்கு தம்பித்துரை கேள்வி!

Thambidurai questioned Election Commission

by Nagaraj, Jan 6, 2019, 11:06 AM IST

திருவாரூரில் தேர்தலை அறிவித்த பின் கருத்துக் கேட்பது சரியா? என்று தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூரில் வரும் 28-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது முதலே சர்ச்சைகளும் எழ ஆரம்பித்துள்ளன. கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. உரிய நிவாரணம் முழுமையாக சென்று சேரவில்லை. இந்த நேரத்தில் தேர்தல் கூடாது என பல தரப்பிலும் புகாரும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்க பட்டுள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் திருவாரூரில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்துக் கேட்டு அறிக்கை அனுப்புமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.

நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்டு அறிக்கையை அனுப்பிவிட்டார். இதில் கருத்து தெரிவித்து சர்வகட்சியினரும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றே கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "கஜா புயல் காரணமாகவும், தைப்பொங்கல் வருவதை கருத்தில் கொண்டும் தேர்தல் ஆணையமே தேர்தல் பற்றி முடிவெடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து தன்னிச்சையாக தேர்தலை அறிவித்துவிட்டு இப்போது கருத்துக்கேட்பது சரியில்லை.

தேர்தல் நேரத்தில் கஜா புயல் நிவாரணமும் வழங்கலாம் என்றும் அறிவித்திருப்பதால் வீண் சர்ச்சைகள் தான் ஏற்படும். பென்னாகரம் தொகுதியில் பொங்கல் நேரத்தில் இடைத்தேர்தல் அறிவித்துவிட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டதை முன்னுதாரணமாகக் கொண்டு தேர்தலை தள்ளி வைப்பதை முடிவு செய்ய வேண்டும்" என்றார் தம்பித்துரை.

You'r reading தேர்தலையும் அறிவிச்சிட்டு கருத்தும் கேட்பது சரியா? -தேர்தல் ஆணையத்துக்கு தம்பித்துரை கேள்வி! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை